ஓடும் காரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மற்றும் அதன் அருகில் உள்ள ஹரியானா, நொய்டா பகுதிகளில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் 15 வயது மாணவி, பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் ஹரியானாவில் நடந்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலரை தேடி வருகின்றனர். இதன் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் அங்கு நேற்று நடந்துள்ளது.
ஹரியானாவில் பரிதாபாத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவரை, சொகுசு காரில் வந்த 3 பேர் கடத்தினர். பின்னர் ஓடும் காரில் வைத்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்தனர். 2 மணி நேரத்துக்கு பிறகு அந்த பெண்ணை, சிக்ரி கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தள்ளிவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் உடலில் பலத்த காயங்கள் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலியல் வன்கொடுமை செய்தவர்களைத் தேடி வருகின்றனர்.