சட்டவிரோதமாக போதை ஊசி பதுக்கி வைத்து விற்பனை - குண்டர் சட்டத்தின்கீழ் இருவர் கைது

சட்டவிரோதமாக போதை ஊசி பதுக்கி வைத்து விற்பனை - குண்டர் சட்டத்தின்கீழ் இருவர் கைது
சட்டவிரோதமாக போதை ஊசி பதுக்கி வைத்து விற்பனை - குண்டர் சட்டத்தின்கீழ் இருவர் கைது

தருமபுரி அருகே போதை ஊசிகளை பதுக்கி விற்பனை செய்துவந்த இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில் உரிய அனுமதி பெறாமல் பல்வேறு இடங்களில் மருந்துகளை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் உத்தரவுப்படி, அதியமான்கோட்டை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதியமான் கோட்டை அருகேயுள்ள மிட்டாதின்னஹள்ளி பகுதியைச் சேர்ந்த வஜ்ரவேல், சாமி செட்டிபட்டியைச் சேர்ந்த முருகேஷ் ஆகிய இருவரும் உரிய அனுமதி பெறாமல் மருந்துகளை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதில் தடை செய்யப்பட்ட மருந்துப்பொருட்களை போதை ஊசியாக போட்டு வந்ததும், இந்த மருந்துகளை ஓரிடத்தில் பதுக்கி வைத்து பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து மருத்துவ ஆய்வாளர் சந்தனமாரி தலைமையிலான குழுவினர், வஜ்ரவேல் மற்றும் முருகேஷ் வீட்டில் ஆய்வுசெய்து வீட்டில் இருந்த தடை செய்யப்பட்ட போதை ஊசிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த ஊசிகளை சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்ததையடுத்து வஜ்ரவேல், முருகேஷ் இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு இளைஞர்களை போதைக்கு அடிமைப்படுத்துவதற்காக தவறான முறையில் இந்த ஊசிகளை விற்பனை செய்து வந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் உள்ள வஜ்ரவேல், முருகேஷ் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com