யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
போபாலில் 19 வயது கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபாலை சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராகி வருகிறார். வழக்கம் போல் பயிற்சி மையத்திற்கு சென்ற அந்த மாணவி இரவு 7 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நான்கு நபர்களால் அந்த மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். முதலில் ஒருவன் அந்த மாணவியின் கையை பிடித்து இழுக்க சுதாரித்து கொண்டவர், அந்த நபரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். கீழே விழுந்த நபர் அங்கு இருந்த அவனது கூட்டாளிகளை அழைக்க அந்த மாணவியை சூழ்ந்து கொண்ட அவர்கள் மாணவியின் கைகளை துணியால் கட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு மாணவியிடம் இருந்த நகைகள் செல்ஃபோன்கள் போன்றவற்றை அந்த கும்பல் பறித்துகொண்டு சென்றுவிட்டது. போபாலில் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும் சாலையின் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியின் பெற்றோர் காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

