பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு இ-மெயில் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்த 16 வயது மாணவனை போலீசார் நேற்று கைது செய்திருக்கிறார்கள்.
உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் இயங்கும் ஒரு ஊடக நிறுவனத்திற்கு சமீபத்தில் வந்த மின்னஞ்சலில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரையும் கொல்லப் போவதாக மிரட்டல் விடப்பட்டது. இது குறித்து ஊடக அலுவலகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த நபரை தேடினர்.
இந்நிலையில், அவர் லக்னோவின் சின்ஹட் பகுதியில் இருந்து வந்த மெயில் என போலீசாருக்கு தெரிய வந்தது. அங்கு சோதனை நடத்திய போலீசார், 16 வயது சிறுவனை பிடித்து நேற்று விசாரணை நடத்தினர். இதில் இ-மெயில் வாயிலாக மிரட்டல் விடுத்தது அவர்தான் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
பீஹாரைச் சேர்ந்த அச்சிறுவன் பிளஸ் 1 முடித்து பிளஸ் 2 படிக்க உள்ளார். மாணவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.