புதுக்கோட்டை அருகே இருதரப்பினர் இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள போசம்பட்டியில் நேற்று ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருதரப்பினர், தேர்தல் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வைத்து மோதிக் கொண்டனர். இதில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கே.புதுப்பட்டி போலீசார் சமாதானம் பேச முயன்றுள்ளனர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தெரிகிறது.
இதனால் மோதலை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இதனிடையே மோதல் சம்பவம் தொடர்பாக 16 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 307 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 16 பேரையும் கைது செய்த போலீசார் திருமயம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் இந்திராகாந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து 16 பேரையும் போலீசார் அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைத்தனர்.