‘15 வயசு பொண்ணுக்கு கல்யாணம் பண்றாங்க’ போன் காலும்.. தடுத்து நிறுத்தப்பட்ட திருமணமும்!
சென்னை வடபழனி பகுதியில் நடைபெறவிருந்த 15 வயது சிறுமியின் திருமணம் காவல்துறை முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டு சிறுமி மீட்கப்பட்டார்.
சென்னை அசோக்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 15 வயதான 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், அவரது தாய் மாமன் மகன் 26 வயதான தினேஷ்குமார் என்பவருக்கும் வடபழனி - ஆற்காடு சாலையில் உள்ள பத்மராமன் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருப்பதாக நேற்று முன்தினம் (24.02.2021) இரவு 08.00 மணியளவில் இந்திய குழுந்தைகள் நல சங்க பெண்கள் உதவி மைய அவசர தொலைபேசி எண் 181 -க்கு ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் அபிராமி, W-27 அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
W-27 அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேணுகா தேவி தலைமையிலான காவல் குழுவினருடன் இந்திய குழந்தைகள் நல சங்க அலுவலர்களும் இணைந்து, பத்மராமன் திருமண மண்டத்திற்கு சென்று, விசாரணை செய்ததில் 15 வயது சிறுமிக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரைகள் கூறி, திருமண நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்தி, சிறுமியை மீட்டனர். விசாரணைக்குப் பின்னர், மீட்கப்பட்ட 15 வயது சிறுமி ஷெனாய் நகர் சிறார் காப்பகத்திற்கு, இந்திய குழந்தைகள் நல சங்க அலுவலர்கள் மூலமாக சேர்க்கப்பட்டார்.