13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை: :உத்தரபிரதேச அதிர்ச்சி
உத்தரபிரதேசம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார், அவரது உடல் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் கரும்பு வயலில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவளது கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, நாக்கு வெட்டப்பட்டிருப்பதாக சிறுமியின் தந்தை கூறினார்.
“பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் கண்கள் வெளியேற்றப்பட்டதாகவோ அல்லது நாக்கு வெட்டப்பட்டதாகவோ தெரியவில்லை. அவர் கண்களை தோண்டப்படவில்லை, கண்களுக்கு அருகில் கீறல்கள் இருந்தன. உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்த கூர்மையான கரும்பு இலைகள் காரணமாக இருக்கலாம்”என்று எஸ்.பி., சதேந்திர குமார் கூறினார். குற்றம்சாட்டப்பட்ட இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாங்கள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வோம்" என்றும் தெரிவித்தார்.
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி இந்த சம்பவத்தை ட்விட்டரில் கண்டித்து, இது மிகவும் வெட்கக்கேடானது என்று கூறினார். மேலும் அவர் யோகி ஆதித்யநாத் நிர்வாகத்தை கடுமையாக கண்டித்தார். கடந்த வாரம்தான் டெல்லியில் இருந்து 100 கி.மீ. தொலைவிலுள்ள மேற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஹப்பூரில் 6 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

