காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவி கொலை; இளைஞர் கைது... அரசியல் தலைவர்கள் கண்டனம் !
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் (21) என்ற இளைஞர் கடந்த சில நாட்களாக காதலிக்குமாறு வற்புறுத்தி வந்திருக்கிறார். மாணவி இது தொடர்பாக அவரது தந்தையிடம் தெரிவித்த நிலையில், மாணவியின் தந்தை முனியராஜின் வீட்டிற்கு சென்று அவரைக் கண்டித்துள்ளார். இந்நிலையில், இன்று காலை சம்பந்தப்பட்ட மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது முனியராஜ் வழிமறித்து காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், மாணவி மறுத்ததால் ஆத்திரத்தில் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். மாணவி மீண்டும் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர் முனியராஜ் தனது கையில் வைத்திருந்த கத்தியால் மாணவியை குத்தியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய முனியராஜை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்துப் பேசிய மாணவியின் தாய், "எனது மகளுக்கு முனியராஜ் மீது ஒருபோதும் காதல் ஏற்படவில்லை; என் மகள் படித்து நல்ல ஒரு நிலைக்கு வர வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு 12ம் வகுப்பில் அதிக கவனம் செலுத்தி படித்து வந்தார். பள்ளிக்கு செல்லும் போது சிரித்த முகத்துடன் கூறி விட்டுச் சென்ற மகளை பிணமாக பார்ப்பேன் என நினைக்கவில்லை" என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப் பதிவு:
காதலிக்க மறுத்ததற்காக பள்ளி மாணவி கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு? என கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு? பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?. திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம். ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
”பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும்” - அன்புமணி ராம்தாஸ்
இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எவருக்கு பாதுகாப்பில்லாத நிலைதான் நிலவி வருகிறது. ஆளுங்கட்சியினருக்கு துணை போகும் சமூக விரோதிகள் மட்டும்தான் இந்த ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர். திமுக ஆட்சியில் எத்தகைய கொடூர குற்றங்களை செய்தாலும் தப்பி விடலாம் என்ற துணிச்சல்தான் இத்தகைய கொலைகளுக்கு காரணம் ஆகும்.
இராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கொடூரமாக படுகொலை செய்த முனியராஜை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். திமுக ஆட்சியின் எஞ்சியுள்ள சில வாரங்களிலாவது பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் பள்ளி மாணவி கொலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “இந்த சம்பவம் பள்ளி வளாகத்திற்கு வெளியே நடந்துள்ளது. ஆனால், அது குறித்து விசாரிக்கப்படும். பள்ளி வளாகத்திற்குள் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். என்ன காரணத்திற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

