பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 12 வயது சிறுமி ஐசியுவில் அனுமதி
டெல்லி புறநகர் பகுதியில் 12 வயதான ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கிவிட்டு சென்றிருக்கின்றனர் மர்ம நபர்கள். மாலை 5.30 மணியளவில் வீட்டின் பால்கனியில் ஒரு சிறுமி ரத்தவெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சோதனை செய்ததில் ஐந்து அல்லது ஆறு தடவைக்கு மேல் கனமான மற்றும் கூர்மையான ஆயுதத்தால் சிறுமியின் தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.
வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் உடனே அருகிலிருந்த சிறிய மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு முடியாது என கூறிய நிலையில் சஞ்சய் காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு பாலியல் வன்கொடுமை நடந்ததை உறுதிசெய்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றிவிட்டனர். இப்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீஸார், அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரி அருகில் இருக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துவருகின்றனர். அனைவரும் வேலைக்கு சென்றபிறகு வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து மதியநேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டிற்கு வெளியே எங்கும் சிசிடிவி கேமிராவில் எதுவும் பதிவாகவில்லை. ஆனால் சிறுமிக்கு அந்த நபரை கட்டாயம் அடையாளம் தெரியும். அவர் கண்விழித்ததும் அவரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டு குற்றவாளி கட்டாயம் கண்டுபிடிக்கப்படுவார்.
கொலைமுயற்சி மற்றும் பாலியல் வன்கொடுமை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.