நாகையிலிருந்து சென்னைக்கு 10 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற கணவன், மனைவி உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வேதாரண்யம் பகுதியிலிருந்து நாகை - காரைக்கால் வழியாக சென்னைக்கு தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் வாஞ்சூர் சோதனை சாவடி அருகே சுங்கத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கார் ஒன்றில் 10 கிலோ 700 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, காரில் இருந்த மகாலிங்கம், அவரது மனைவி ராதாமணி மற்றும் வாகன ஓட்டுனர் ரகுநாதன் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் அவை இலங்கையில் இருந்து கடல்வழியாக நாகை மூலம் சென்னைக்கு கடத்தப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட கணவன், மனைவி, கார் ஓட்டுநர் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி மூவரையும் வருகின்ற 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.