’பைக்க தான் திருட முடியல பெட்ரோலையாவது திருடுவோம்’-சிசிடிவியில் சிக்கிய திருடர்களின் செயல்
புதுக்கோட்டை இலுப்பூரில் திமுக கவுன்சிலர் வீட்டில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருட வந்த மர்மநபர்கள், அது முடியாமல் போனதால் அதிலிருந்து பெட்ரோலை மட்டும் திருடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சியின் திமுக கவுன்சிலராக இருப்பவர் சேக்முகமது. இவரது வீடு இலுப்பூர் முஸ்லீம்தெருவில் உள்ளது. இவரது குடும்பத்தினர் நேற்று இரவு வழக்கம்போல் இரவு தூங்க சென்று விட்டனர். இவர்களது இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியில் நிறுத்துவது வழக்கமாக இருந்துள்ளது.
இந்த நிலையில், காலையில் எழுந்து பார்த்தபோது இவரது மோட்டார் சைக்கிள் ஒயர்கள் அறுக்கப்பட்டு மோட்டர் சைக்கிளில் இருந்த பெட்ரோல்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவில் மூன்று இளைஞர்கள் உள்ளே வருவதும் சேக்முகமதுவின் இரு சக்கர வாகனத்தில் உள்ள ஒயர்களை அறுத்து இருசக்கர வாகனத்தை திருட முயற்சிப்பதும், அது முடியாமல் போகவே பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை ஒரு பாட்டிலில் பிடித்துக் கொண்டு மீண்டும் அங்கிருந்து சென்றதும் பதிவாகியிருந்தது.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே அந்த பகுதியில் ஒரு மருத்துவரின் வீட்டில் 100 சவரன் நகைகள் காணாமல் போன நிலையில், அடுத்தடுத்த இது போன்ற திருட்டு முயற்சி சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சி ஏற்படுத்துவதாகவும், இந்த பிரச்சனைக்கு காவல்துறையினர் நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.