என் அப்பா, அம்மாவின் கழுத்தை அறுத்தார்: 10 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்!
‘என் அப்பா, அம்மாவின் கழுத்தை அறுத்துக்கொன்றதைப் பார்த்தேன்’ என்று கூறிய பத்து வயது சிறுவனை போலீசார் கவுன்சிலிங்கிற்கு அனுப்பியுள்ளனர்.
தெற்கு டெல்லியில் உள்ள பண்டர்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் மனைவி மீனாட்சி. இருவருக்கும் கடந்த 12 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயது மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். பிரவீனுக்கு சரியான வேலை இல்லாததால் மனைவிக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு நடக்கும். இதனால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது அம்மாவின் ஊருக்குச் சென்றார் மீனாட்சி. அங்கும் சென்று தகராறில் ஈடுபடுவாராம் பிரவீன்.
இந்நிலையில் கடந்த 5-ம் தேதி இதே போல் தகராறு நடந்துள்ளது. அப்போது இளைய மகன் பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருக்க, பெரிய மகன் அம்மாவின் அருகில் நின்றுகொண்டிருந்தான். வாக்குவாதம் அதிகரிக்க, திடீரென்று மீனாட்சியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார் பிரவீன். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மீனாட்சி, பேச முடியாமல் தனது மகனை உதவிக்கு சைகையால் அழைத்துள்ளார். ஆனால், அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் 10 வயது மகன் அங்கேயே நின்றுள்ளான். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீனாட்சியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இதையடுத்து போலீசார் பிரவீனை தேடி வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களின் 10 வயது மகன், நடந்த சம்பவத்தை அப்படியே சொல்லியுள்ளான். தற்போது பாட்டி வீட்டில் இருக்கும் அந்தச் சிறுவனை போலீசார் கவுன்சிலிங்கிற்கு அனுப்பியுள்ளனர்.