இந்தியா: 3 டோஸ் கொண்ட ’ஜைகோவ்-டி’ தடுப்பூசி அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல்

இந்தியா: 3 டோஸ் கொண்ட ’ஜைகோவ்-டி’ தடுப்பூசி அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல்

இந்தியா: 3 டோஸ் கொண்ட ’ஜைகோவ்-டி’ தடுப்பூசி அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல்

இந்தியாவில் ‘ஜைடஸ் கெடிலா' நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு, இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ZyCov-D என்ற அந்த தடுப்பூசி,  அவசரகால பயன்பாட்டுக்காக ஒப்புதல் பெற்றிருக்கிறது.

இந்தியாவை சேர்ந்த ஜைடஸ் கெடிலா என்ற நிறுவனம்தான் இந்த ஜைகோவ்-டி தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. மத்திய அரசின் உயிரிதொழில்நுட்பத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர். ஆகியவற்றுடன் இணைந்து இது கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி, இந்தியாவில் கண்டறியப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் இரண்டாவது உள்நாட்டு தடுப்பூசி. அதேநேரம், இது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ஆறாவது கொரோனா தடுப்பூசி. முன்னதாக கோவாக்சின், கோவிஷீல்டு, மாடர்னா, ஸ்புட்னின் வி, ஜான்சன் & ஜான்சன் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டிருந்தன.

இந்த ஜைகோவ்-டி’யில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பெயரில் மட்டுமே இதில் ஊசி என்பது இருக்கும். ஊசியில்லாமல் எப்படி செலுத்தப்படும் என நாம் நினைக்கலாம். புதுவித டெக்னாலஜியின் மூலம், இப்படியான ஊசியின்றி, சதையின் சிறிய துளைக்குள் செல்லும்படியான எளிமையான ஒரு மருந்து செலுத்தும் கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதை செலுத்திக்கொள்ள நினைப்பவர்கள் 28 நாள்கள் இடைவெளியில், 3 டோஸ்கள் இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். 12- 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி நல்ல பலனை தருமென கூறியிருக்கும் இதன் தயாரிப்பாளர்கள், விரைவில் அதற்கான ஒப்புதலையும் பெற நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த ஜைகோவ்-டி, உலகளவில் டி.என்.ஏ. தொழில்நுட்பத்தில் உருவான முதல் தடுப்பு மருந்து.  டி.என்.ஏ. தொழில்நுட்பம் என்பது, மரபுப்பொருளில் (Plasmid) கொரோனா வைரஸின் வெளிப்புறத்திலுள்ள முள்போன்ற அமைப்புள்ள ஸ்பைக் புரதம் கோடிங் செய்யப்பட்டு - அதனை உடலுக்குள் செலுத்துவது.

இப்படியாக உடலுக்குள் செலுத்தும்போது, அந்த ஸ்பைக் புரதம் முள்போன்ற அமைப்பை உருவாக்கும். இதனை நோய் எதிர்ப்பு மண்டலம் அடையாளம் கண்டு, அதற்கெதிராக ஆன்டிபாடியை உற்பத்தி செய்யும். அப்படி கொரோனாவுக்கு எதிரான சக்தியை அந்நபர் பெறுவார். இது டெல்டா கொரோனாவுக்கு எதிராகவும் செயல்படுமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுக்கு 10 முதல் 12 கோடி வரை தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தடுப்பூசி தட்டுப்பாடு பெருமளவில் குறையுமென நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com