’மிக்ஸ் & மேட்ச்’ கலப்பு தடுப்பூசி வழிமுறை ஆபத்தானது: WHO சௌமியா சுவாமிநாதன் கருத்து

’மிக்ஸ் & மேட்ச்’ கலப்பு தடுப்பூசி வழிமுறை ஆபத்தானது: WHO சௌமியா சுவாமிநாதன் கருத்து
’மிக்ஸ் & மேட்ச்’ கலப்பு தடுப்பூசி வழிமுறை ஆபத்தானது: WHO சௌமியா சுவாமிநாதன் கருத்து

கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களை எடுத்துக்கொள்ளும்போது முதலாவது டோஸ் ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியாகவும், இரண்டாவது டோஸ் வேறொரு நிறுவனத்தின் தடுப்பூசியாகவும் எடுத்துக்கொள்வது ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கலப்பு தடுப்பூசி என்ற இந்த வழிமுறை, பாதுகாப்பானதுதான் என்பதற்கு மிகக்குறைவான சான்றுகள் இருப்பதை தொடர்ந்து அவர் இதனை கூறியுள்ளார்.

ஜெனிவாவில் நடந்த உலக சுகாதார நிறுவனத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுதொடர்பாக பேசிய அவர், கலப்பு தடுப்பூசி வழிமுறை தொடர்பாக நிறைய சந்தேகங்களை பொதுமக்கள் உலக சுகாதார நிறுவனத்திடம் கேட்பதாக கூறினார். அக்கேள்விக்கான பதிலாக, “இவ்விவகாரத்தில் தரவுகள், ஆதாரங்கள் என எதுவும் போதியளவு கிடைக்கவில்லை. ஆகவே இப்போதைக்கு இதை சற்று ஆபத்தான வழிமுறையாகவே நாங்கள் கருதுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸூம், பைசர் தடுப்பூசி இரண்டாவது டோஸூம் எடுத்துக்கொள்பவர்களுக்கு நோய்ப் பாதிப்புக்கு எதிரான கூடுதல் நோய் எதிர்ப்புத்திறன் கிடைக்கிறது என சில ஆய்வுகள் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுக்க நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டை தவிர்க்க, உலக நாடுகள் சில இவ்வழிமுறையை ஆதரித்துள்ளன. உதாரணத்துக்கு சமீபத்தில் தாய்லாந்தில் ஸ்புட்னிக்-வி இரு டோஸ் தடுப்பூசிக்கு பதில், சீனாவின் ‘சினாவேக்’ தடுப்பூசி மற்றும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தியது. இருப்பினும் இன்னும் பல நாடுகளில் இதற்கு அனுமதி இல்லை. ஆனாலும், மக்கள் சிலர் சுயமாக இதை எடுத்துக்கொள்ளும் செயல்கள் நடந்து வருகின்றன. அதை தடுக்கும் நோக்கத்தில்தான், சௌமியா சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

“இதுபற்றிய ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்துக்கொண்டிருக்கிறது. அது முடியும்வரை நாம் காத்திருக்க வேண்டும். தற்போதுவரை கோவிஷீல்டு முதல் டோஸூம், பைசர் இரண்டாவது டோஸூம் போடுவதற்கான பலன்கள் மட்டுமே நமக்கு தெரியவந்துள்ளது. அனைத்துக்கும் முடிவு கிடைக்கும்வரை நாம் காத்திருக்க வேண்டும்.

இந்த கலப்பு தடுப்பூசி வழிமுறையில், மக்கள் வழிகாட்டுதலின்றி முடிவெடுத்தால் இரு டோஸூக்கு இடையிலான கால இடைவெளியில் குழப்பம் ஏற்படும் வாய்ப்புள்ளது. சில தடுப்பூசிகளில் மூன்றாவது, நான்காவது டோஸ்கூட வரலாம். அப்போது அதை யாரெல்லாம் எடுக்கலாம், இதற்கு முன்னர் கலப்பு முறையில் தடுப்பூசி எடுத்தவர்கள் இப்போது மூன்றாவது – நான்காவதாக எந்த தடுப்பூசியை போடலாம், அதை எப்போது போடலாம், யார் எந்த தடுப்பூசியை போடலாம் என அடுத்தடுத்த நிறைய சிக்கலை உருவாக்கலாம். இவற்றை தடுக்க, இப்போதைக்கு மக்கள் இவ்விவகாரத்தில் அமைதி காக்க வேண்டும்” எனக்கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக அதிகம் பேசப்பட்டு வரும் பூஸ்டர்டோஸ் எனப்படும் ‘தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்கும் கூடுதல் டோஸ் தடுப்பூசி’ குறித்தும், இந்த செய்தியாளர் சந்திப்பில் சௌமியா சுவாமிநாதன் பேசியுள்ளார்.

”பணக்கார மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நாடுகள், பூஸ்டர் டோஸ் கொடுக்க திட்டமிட்டால், அவர்களுக்கு கூடுதலாக 80 கோடி தடுப்பூசி தேவைப்படும். ஆனால் இப்போதைக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவது எந்தளவுக்கு அத்தியாவசியமானது என்பதற்கு போதுமான சான்றுகள் இல்லை. எந்தவொரு தடுப்பூசி நிறுவனமும், தங்களின் தடுப்பூசிக்கு பூஸ்டர் டோஸ் அவசியமென சொல்லவில்லை.

மேலும் இன்னும்கூட உலக நாடுகளில் பல நோய் பாதிப்பையும், இறப்பையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது. ஆகவே இன்னும் ஒரு வருடமோ, இரண்டு வருடமோ இடைவெளி விட்டு பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்வதே சிறந்ததாக இருக்குமென நாங்கள் கருதுகிறோம். இப்போதைக்கு உலக மக்கள் அனைவருக்கும் அவர்களின் முதல் டோஸ் - இரண்டாவது டோஸ் தடுப்பூசி கிடைக்கசெய்வதே முதல்நிலையாக இருக்கிறது” எனக்கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com