
கோவையில் கொரோனாவால் வேலை இழந்து பெண் குழந்தையுடன் தவிக்கும் பெண் ஒருவர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்.
கோவை லாலி சாலை முனியப்பன் கோவில் வீதியில் வசித்து வருபவர் வத்சலா(49). திருமணமாகி 11 மாதத்திலேயே கணவரை இழந்த வத்சலா, கடந்த 12 ஆண்டுகளாக வீட்டு வேலைகள் செய்து தனி ஒருவராக தனது பெண் குழந்தையை வளர்த்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக அமல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கினால் அவர் செய்து வந்த வீட்டு வேலையும் பறி போனதாகத் தெரிகிறது. இதனால் கடந்த 5 மாதங்களாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடி வருகிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “ எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் என் பெண் குழந்தையைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பாழாகிவிட்டது.போதிய வசதி இல்லாததால் தனியார் பள்ளியில் படித்து வந்த குழந்தையை தற்போது அரசு பள்ளியில் சேர்த்துள்ளேன். அதில் கூட எனக்கு வருத்தமில்லை. இந்த கொரோனா ஊரடங்கில் எனக்கு எங்கேயும் வேலைக் கிடைக்கவில்லை. வரும் மாதத்திலும் வேலைக்கிடைக்கவில்லை என்றால் அடிப்படைத் தேவைகளுக்கு நாங்கள் என்ன செய்வோம்” என்று கண்ணிரூடன் தனது இயலாமையை விளக்கினார்.