நாடு முழுவதும் இதைக் கடைப்பிடித்தால் எப்படி இருக்கும்.. நெகிழ வைத்த விஜயவாடா மக்கள்

நாடு முழுவதும் இதைக் கடைப்பிடித்தால் எப்படி இருக்கும்.. நெகிழ வைத்த விஜயவாடா மக்கள்
நாடு முழுவதும் இதைக் கடைப்பிடித்தால் எப்படி இருக்கும்.. நெகிழ வைத்த விஜயவாடா மக்கள்

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்போது வரை நம் நாட்டில் 606 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் சிகிச்சையளித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மிகச் சிறந்த வழியாக அரசு சொல்வது "சமூக விலகியிருத்தல்", அதாவது, "வீட்டிலேயே இருப்பது" ஆகியவைதான். இதைத்தான் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடியும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டு மக்களிடையே நேற்று சற்று உருக்கமாகப் பேசிய மோடி "நீங்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால், வீட்டுக்குள் கொரோனா புகுந்துவிடும். எனவே சமூக விலகியிருத்தலைக் கடைப்பிடியுங்கள்" எனக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். ஏன் சற்று முன் கூட உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி "விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு" என மக்களிடையே வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு திங்கள்கிழமை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் செவ்வாய் மாலை 6 மணி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்பதுதான் அது.

மேலும், அந்த அறிவிப்பில் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டும் இருந்தது. ஆனால், முதல் கட்டமாகத் திங்கள்கிழமை மாலையே சமூக விலகியிருத்தலை கை கழுவினர் தமிழக மக்கள். அரசு சார்பில் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டும், பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டும் பல்வேறு ஊர்களிலிருந்து சொந்த ஊர்களுக்குப் பேருந்தில் படையெடுத்தனர். இது பெரும் அச்சத்தை உண்டாக்கியது. காய்கறிகள் கிடைக்கும் என அறிவித்தும் கோயம்பேடு சந்தையைக் கூட்டம் கூட்டமாக மொய்த்தனர்.

இதில், சமூக விலகியிருத்தலைச் சரியாகக் கடைப்பிடித்தது, குடிமகன்கள் என்றால் மிகையல்ல. பல்வேறு ஊர்களில் டாஸ்மாக் கடை முன்பு போதிய இடைவெளிவிட்டு கோடுகள் கிழிக்கப்பட்டு, அங்கு நின்று வரிசையில் நின்றுதான் தங்களுக்கான "சரக்கு"களை வாங்கிச் சென்றனர். அதற்குக் காரணம் அந்த அந்தப் பகுதிகளில் இருக்கும் அதிகாரிகள். அவர்களாகவே முன்வந்து இத்தகைய செயலை செய்தனர். மக்கள் விதிமுறைகளை மீறுபவர்கள்தான் அதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் பொதுப்படையாக எல்லோரும் அப்படியல்ல என்பதே நிதர்சனமான உண்மை. "நீ இப்படிதான் வரிசையில் வந்து உன் பொருள்களை வாங்க வேண்டும்" என்று கூறினால் நம் மக்கள் அதனை நிச்சயமாக பின் பற்றுவார்கள்.

ஏனென்றால், அவர்களுக்குத் தேவை பொருள், அதைக் கூட்டமாக முந்தியடித்துதான் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. தனக்குத் தேவையானது கிடைத்தால் போதும் அதற்கு சமூக விலகியிருத்தல் அவசியம் என்றால் நிச்சயம் பின்பற்றுவார்கள். அதற்கு அந்தந்தப் பகுதி அதிகாரிகள் துணை நிற்க வேண்டும். கொரோனா வைரஸ் அச்சம் மக்களுக்குப் பெரிய தாக்கத்தை உண்டாக்கியதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், அதிகாரிகளுக்கு நிச்சயம் தெரியும். இப்போது இந்தியா முழுவதும் ஊரடங்குதான், ஆனால் அத்தியாவசியப் பொருள்களை வாங்க மக்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு விஜயவாடாவில் உள்ள காய்கறி சந்தையில் கோடுகள் கிழிக்கப்பட்டு மக்கள் சமூக இடைவெளி விட்டு நின்று தங்களுக்குத் தேவையானதை வாங்கி வருகிறார்கள். இதற்கு விஜயவாடா நகரின் நிர்வாகமும் காரணம். இதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதேப்போன்று நாடு முழுவதும் கடைபிடித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசின் எண்ணமும், மக்களின் ஒத்துழைப்பும் ஒரே புள்ளியில் இணைந்தால் நிச்சயம் கொரோனா எதிர்ப்பு யுத்தம் வெற்றிகரமாக முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com