தடுப்பூசி: கடவுள் வேடமணிந்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்திய நாடக நடிகர்கள்
கரூரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து கடவுள் வேடமணிந்த நாடக கலைஞர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கரூர் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தும் 4-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி 50 இருசக்கர வாகனங்களில் நகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதேபோல, காந்திகிராமம் பகுதியில் தமிழ் கடவுள் முருகன், சிவன், விஷ்ணு, பார்வதி, எமதர்மன் வேடம் அணிந்த நாடக கலைஞர்கள் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்