கொரோனாவுக்கு காவல் ஆய்வாளர் உயிரிழப்பு - நெல்லையில் சோகம்
நெல்லையில் கொரோனாவிற்கு காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்தம 3 வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதியில் அதிகமாக பரவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக நெல்லை மாநகர காவல் ஆயுதப்படை ஆய்வாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி கடந்த 15 நாட்களாக நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நெல்லை மாவட்டத்தில் காவல்துறையில் இது முதல் உயிரிழப்பாகும். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதுபோன்று நெல்லை சங்கர்நகர் பகுதியைச் சேர்ந்த 97 வயது முதியவர் ஒருவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார், நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில் இன்று 3 பேர் உயிரிழந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

