“எல்லாம் சரியாகிவிடும்” இத்தாலி மக்களுக்கு ஆறுதலளித்த ‘பிறந்த குழந்தை’ !
கொரோனா வைரஸ் பாதிப்பால் கடுமையான பாதிப்புக்குள்ளான நாடு இத்தாலி. ஐரோப்பிய நாடுகள் பலவும் கொரோனாவால் கொடூரமாக பாதிக்கப்பட்டாலும் இத்தாலிக்கு இழப்புகள் அதிகம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி மாறியுள்ளது. அங்கு, கொரோனா தொற்றால் இதுவரை 2 ஆயிரத்து 503 பேர் உயிரிழந்துள்ளனர். 31 ஆயிரத்து 506 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 345 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக மூவாயிரத்து 526 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இத்தனை களேபரங்களுக்கு நடுவே பிறந்த குழந்தை ஒன்றின் புகைப்படம் இத்தாலி மக்களுக்கு புத்துயிர் அளிப்பதாக மாறியுள்ளது. நாடே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வரும் நிலையில், நிகுர்டா மருத்துவமனையில் குழந்தையொன்று இன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தை அணிந்திருந்த டயபரின் பின் புறத்தில் "எல்லாம் சரியாகிவிடும்" என்ற வாசகம் இத்தாலி மொழியில் எழுதப்பட்டிருந்தது.
இந்தப் புகைப்படத்தை மார்ச் 16 ஆம் தேதி வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம் அதில் "வேறு எதையும் விட வாழ்க்கை வலிமையானது ! இப்போதிருக்கும் கடினமான சூழ்நிலையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையைும் வரவேற்கிறோம்..வாழ்க்கை எப்போதும் ஓரிடத்தில் நிற்கக் கூடியவில்லை என்பதற்கு நீங்களே சான்று" என பதிவிட்டிருந்தது.
மருத்துவமனை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. உலகளவில் இந்தப் பதிவை 5800 பேர் பகிர்ந்துள்ளனர். 3700 பேர் லைக்கிட்டுள்ளனர். ஏராளமானோர் தங்களது கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதில் பலரும் குழந்தைகளை வரவேற்கிறோம் என பதிவிட்டுள்ளனர். பலர், "நீங்களே எங்களின் நம்பிக்கை" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். சிலர் "இப்போதுள்ள சூழ்நிலையில் உலகிலேயே மிகவும் அழகான புகைப்படம் இதுதான், எங்களின் பிரார்த்தனையே வாழ்க்கையின் பலம்" என கூறியுள்ளனர்.