மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடா..? மத்திய அரசு விளக்கம்
நாடு முழுவதும் மருந்துகள் கிடைப்பதில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊடரங்கு உத்தரவு ஏப்ரல் 14-ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்படும் என்ற அச்சத்தின் பேரில், மக்கள் மருந்துகளை வாங்கி இருப்பில் வைப்பதாகவும், இதனால் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தகவல் வெளியானது. இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் தட்டுப்பாடின்றி மருந்துகள் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது. மருந்துகள் விநியோகம், இருப்பு உள்ளிட்டவற்றை மருந்தியல் துறை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவால் அத்தியாவசிய கடைகளான மருந்தகம், காய்கறி கடை, இறைச்சிக் கடை , மளிகைக் கடைகளைத் தவிர மற்ற கடைகள் திறக்கப்படுவது இல்லை.
இதனால் மக்கள் தங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வாங்க மருந்தகங்களில் கடந்த ஒரு வாரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர். அந்த வகையில் திண்டுக்கல்லில் உள்ள அனைத்து மருந்தகங்களில் நீண்ட வரிசையிலும், ஒரு சில கடைகளில் சமூக இடைவெளி விட்டு நாற்காலிகளில் அமர்ந்தும் மக்கள் மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர். தற்போது கூரியர் , லாரி போக்குவரத்து தடைபட்ட காரணத்தால் வெளியூர்களிலிருந்து மருந்துகள் வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

