ரியல் எஸ்டேட் துறையையும் விட்டு வைக்காத கொரோனா
கொரோனா வைரஸ் தாக்கம் ரியல் எஸ்டேட் துறையிலும் எதிரொலித்துள்ளது. கொரோனா வைரஸால் ரியல் எஸ்டேட் துறையின் எதிர்காலமே இருண்டுவிட்டதாக அத்துறையினர் ஆதங்கப்படுகின்றனர்.
சென்னையில் நடைபெற்று வந்த அனைத்து கட்டடப்பணிகள், ரியஸ் எஸ்டேட் திட்டங்களை கொரோனா வைரஸ் தற்போது முடக்கி வைத்துள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை செய்யமுடியாத சூழலிலும், எதிர்கால முதலீடாக வீடுகளை வாங்க திட்டமிட்டவர்களை அதனை தற்போது கைவிட்டுள்ளதாலும் ரியல் எஸ்டேட் துறை மேலும் மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், ரியல் எஸ்டேட் துறையின் எதிர்காலம் நிச்சயமற்று இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை முதலே ரியஸ் எஸ்டேட் துறை இழப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனாவால், நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. அதனால், தற்போது செயல்பாட்டிலுள்ள திட்டங்களைக் கூட தொடர முடியவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்தாண்டு 6.2 மில்லியன் சதுர அடியாக இருந்த அலுவலக தேவைக்கான இடம் இந்தாண்டு 5 மில்லியன் சதுர அடியாக குறையலாம் என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்
அதேநேரம், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 41.2 லட்சம் சதுர அடி பரப்பளவில் பன்முகக் கட்டடங்களைக் கட்டுவதற்கு சிஎம்டிஏ ஒப்புதல் அளித்துள்ளது, இது 2019 ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 140% அதிகமாகும். ஆனால், கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த பெரும்பாலான வடக்கு மற்றும் கிழக்கு மாநில தொழிலாளர்கள் கொரோனா அச்சத்தால் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
ஊரடங்கால் உள்ளூர் தொழிலாளர்களும் அச்சம் காரணமாக சரிவர பணிக்கு வருவதில்லை. அதனால் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களும், புதிய திட்டங்களும் காலதாமதமாகும். இந்த நிலை ஜூன் மாத இறுதிவரை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளதால் ரியல் எஸ்டேட் துறையினர் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.