கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,538 பேருக்கு கொரோனா உறுதி
தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 1,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 99 பேர்.
நேற்றைய தினம் மொத்த பாதிப்பு 1,551 பேருக்கு உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்று பாதிப்பு சற்று குறைந்திருந்தது. சென்னையில் இன்று ஒரே நாளில் 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இது நேற்றைய எண்ணிக்கையைவிட (182) சற்று அதிகம்.
மாவட்ட வாரியாக கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கையிலும் குணமடைந்தோர் எண்ணிக்கையிலும் கோவை (பாதிப்பு - 209; குணமடைந்தோர் - 239) முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து சென்னை (189), ஈரோடு (132), செங்கல்பட்டு (108), தஞ்சாவூர் (76), திருப்பூர் (75) என்று உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை, 22. இவர்களில் 18 பேர் அரசு மருத்துவமனையையும், 4 பேர் தனியார் மருத்துவமனையையும் சேர்ந்தவர்கள். இவர்களில் 3 பேர் இணை நோய் இல்லாதவர்கள். இந்த எண்ணிக்கை உயர்வின்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,878 என்று உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், சிகிச்சையிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,753. இதன்மூலம் சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 17,322 என்றும்; நலமடைந்து வீடுதிரும்பியோர் எண்ணிக்கை 25,59,637 என்றும் ஆகியுள்ளது.