சமூக தனித்திருத்தலை கடைப்பிடிக்கிறதா தமிழகம் ?
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க சமூக விலகல் மிகவும் அவசியம் என்பதை உலக சுகாதார நிறுவனமும், மருத்துவர்களும் வலியுறுத்துகிறார்கள். ஆனால், மக்கள் அதனைப் பின்பற்றுகிறார்களா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே. இதையேதான் தமிழகமும் பிரதிபலித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தடுக்க, உலக நாடுகள் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து 'லாக் டவுன்' எனப்படும் முழு முடக்கத்தை அமல்படுத்தி வருகின்றன. ஆனால், இதனை விடுமுறைக் காலமாகக் கொண்டாடும் போக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் காணப்படுகிறது.
இத்தாலியில் ஆரம்பத்தில், அதிக அளவு தொற்று பரவிய வடக்குப் பகுதி சிவப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தொற்று பரவியதையடுத்து, மார்ச் 9 ஆம் தேதி நாடு தழுவிய அடைப்பு அறிவிக்கப்பட்டது. மீறுவோருக்கு அபராதமும் அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்லாயிரக்கணக்கான இத்தாலியர்கள், தடையை மீறினர். அதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, மக்களைக் கட்டுப்படுத்த ராணுவம் அழைக்கப்பட்டது. இரண்டு நாட்களில் ஆயிரத்து 400 பேர் இறந்த நிலையில், மக்கள் மீதான கெடுபிடிகள் மிகக் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. அதற்குள், சீனாவையே விஞ்சும் அளவுக்கு இத்தாலியில் உயிரிழப்புகள் நேரத் தொடங்கிவிட்டன. ஆயினும் பல மேற்கத்திய நாடுகள், இத்தாலி இழைத்த தவறுகளிலிருந்து பாடம் கற்கத் தவறி வருகின்றன.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் பல்பொருள் அங்காடிகளிலும், வணிக வீதிகளிலும் மக்கள் பெருமளவில் குவிந்தனர். மக்களின் அலட்சியமான போக்கை அடுத்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், முழு முடக்கத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார். இதன்படி, 4 காரணங்களுக்காக மட்டுமே வெளியே வர மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியத் தேவைகள் வாங்குவதற்காக, மருத்துவ சேவைக்காக, மிக அவசியமான பணி நிமித்தம் மற்றும் ஒரு நாளில் ஒருமுறை மட்டும் உடற்பயிற்சிக்காகவும் வெளியே வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும், வீடுகளுக்குள் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டபோது, அவர்கள், கடற்கரைகளிலும் பூங்காக்களிலும் குவிந்தனர். அதன் எதிரொலியாக அமெரிக்காவிலும் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
வெளிநாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவிலும் மக்களின் அலட்சியம் தொடரவே செய்கிறது. மக்கள் ஊரடங்கின்போது வீடுகளுக்குள் முடங்கிய மக்கள், மாலை 5 மணிக்கு கைகளைத் தட்ட வெளியே வந்து கூட்டம் கூடினர். தமிழகத்திலோ, தீபாவளி, பொங்கல் விடுமுறைக் காலங்களைப்போல, சொந்த ஊர் செல்ல மக்கள் கூட்டம் கூட்டமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். பெருங்கூட்டமாகச் சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டதும் கொரோனா குறித்த அச்சம் ஏதும் அவர்களிடம் இல்லாததை உணர்த்தியது.
குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்களுக்குக் காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லாவிட்டாலும் தங்களை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பன போன்ற அடிப்படை விஷயங்களை கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா தொற்றைத் தவிர்க்க முடியும்.