ஓமன் நாட்டில் இருந்து இந்தியா வந்த தமிழர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்துள்ளது மத்திய அரசு. இதனையடுத்து இந்தியாவில் இப்போது 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஓமனில் இருந்து வந்த தமிழர் யார் ? தமிழகத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் பாதுகாப்பு கருதி மத்திய சுகாதாரத்துறை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா முதலில் உருவான சீனாவின் ஹூபெ மாகாணத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 99 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், 97 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இதுவரை 80 ஆயிரத்து 651 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மூவாயிரத்து 70 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு வெளியே 96 நாடுகளில் 21,529 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு அடுத்தப்படியாக தென்கொரியா, இத்தாலி, ஈரான், பிரான்ஸ் நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. செர்பியா, வாடிகன், ஸ்லோவோக்கியா, பெரு, டோகோ, பூடான் நாடுகளில் முதன் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.