தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி !
சென்னையைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தமிழக சுகாதாரத்துறை " மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல் நிலை சீராக உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தமாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு பேர் குணமடைந்துள்ளனர். சேலத்தில் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மூன்றாக உள்ளது. அதில் ஒருவர் கடந்த 25ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார். வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, கோவை, திருப்பூர், தஞ்சை, அரியலூர், நெல்லை, ராஜபாளையம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.