``மிகவும் மெதுவாக பூஸ்டர் டோஸை விநியோகிக்கிறார்கள்”- அரசின் மீது ஜப்பான் மக்கள் அதிருப்தி
ஜப்பானில் மக்கள் பலரும், தங்கள் நாட்டில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி விநியோகம் மிகவும் மெதுவாக இருப்பதாக கூறி, அந்நாட்டு ஆட்சி மீது சர்வே ஒன்றின் வழியாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த வாரம்தான், ஜப்பான் எல்லைகளில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்துவது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசிப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவை கையாள்வதில் ஜப்பான் அரசின் சரியாக செயல்படவில்லை எனக்கூறி அந்நாட்டு மக்கள் கடந்த ஜூலையில் கடுமையான அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதனால் அந்நாட்டு பிரதமர் ஃபூமியோ கிஷிதாவின் அரசு பெரும் நெருக்கடியை அச்சயமத்தில் நாடாளுமன்றத்தில் சந்தித்திருந்தது. இந்நிலையில், தற்போது 73% குடியிருப்புவாசிகள், அங்குள்ள ஒரு பத்திரிகை நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் மிகவும் மெதுவாக விநியோகிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுவரை ஜப்பானில் மொத்த மக்கள் தொகையில் 14.4% பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு கிட்டதட்ட 30% பேர் 65-வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதால், அவர்களுக்கு பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா பூஸ்டர் டோஸ் மிகவும் மெதுவாக விநியோகிக்கப்படுவதால், நாட்டில் பெரும்பாலானோர் உயிர் அபாயத்தில் இருப்பதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம்தான் அந்நாட்டு பிரதமர் பூஸ்டர் டோஸ் விநியோகத்தை தாங்கள் வேகப்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார். அவரேவும் அடுத்தமாதம்தான் தனக்கான பூஸ்டர் டோஸை எடுக்க உள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் `பிப்ரவரி ஒருநாளில் 1 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை மக்களுக்கு தருவது’ என்ற பிரதமர் கிஷிதாவின் இலக்கு விரைவில் நிறைவேற உள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒவ்வொரு நாளும் சுமார் 7 லட்சம் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
என்னதான் ஜப்பானில் தடுப்பூசி விநியோகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டாலும், அங்கு உயிரிழப்பு குறையவில்லை. அதனால் எல்லையில் இப்போது கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது சரியில்லை என்று அந்நாட்டு மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய செய்தி: சிறார்களுக்கான கரோனா தடுப்பூசி - கோர்பேவேக்ஸுக்கு அவசரகால அனுமதி