இப்படியொரு கருணையா!! மற்றொரு நோயாளியைக் காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த மருத்துவர்
குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணரான சங்கெத் மேக்தா என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் 42 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். இவருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 65 வயது முதியவருக்கு நிலைமை மோசமாகவே தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜனை 15-20 நிமிடங்கள் அந்த நோயாளிக்குக் கொடுத்தார். அதனால் அந்த நோயாளி காப்பாற்றப்பட்டார்.
பொதுவாகவே மயக்கமருந்து நிபுணர்கள் இக்குபேஷன் செயல்முறையில் தேறியவர்களாக இருப்பார்கள். எனவே சங்கெத் தைரியமாக இந்த செயலை செய்துள்ளார். ஆனால் 15-20 நிமிடங்கள் ஆக்ஸிஜன் உதவி இல்லாமல் இருந்ததால் அவருடைய நிலைமை மோசமானது. எனவே வெண்டிலேட்டரில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அவருக்கு கூடுதல் ஆக்ஸிஜன் உதவி தேவைப்படவே அவரை சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வந்த அவருக்கு நுரையீரல் செயலிழந்து விட்டதாக சென்னை மருத்துவர்கள் கூறிவிட்டனர். நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே அவரைக் காப்பாற்ற முடியும் எனவும் கூறிவிட்டனர். அதற்கு குறைந்தது 1.5 கோடி செலவாகும் என்பதால், அவருடைய நண்பர்கள் நன்கொடை சேர்க்கத் தொடங்கியுள்ளனர்.
மற்றொரு நோயாளியின் உயிரைக் காப்பாற்ற தன்னுடைய உயிரையே பணயம் வைத்துள்ளார் இந்த மருத்துவர்.