கொரோனாவில் இருந்து குணமாகி சென்றவர்களை கண்காணிக்க தனி மையங்கள் - ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றிலிருந்து பாதிக்கப்பட்டு குணமாகி சென்றவர்களை கண்காணிக்க தனி மையங்கள் உருவாக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
இது குறித்து புதியதலைமுறைக்கு அவர் கூறும் போது “ தொற்றிலிருந்து குணமாகிச் சென்றவர்கள் பலர் மீண்டும் மருத்துவமனைகளுக்கு வந்து பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். தொற்றிலிருந்து குணமாகி செல்லும் 80% பேர் எந்த புகாரையும் தெரிவிப்பதில்லை. ஆனால் சிலருக்கு இதய பிரச்சனை, நிமோனியா, ரத்தம் கட்டுதல், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிய வந்திருக்கிறது. ஆகவே குணமாகிச் சென்றவர்களை கண்காணிக்க ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முன்னோடி திட்டமாக ஒரு மையம் தொடங்கப்படும் எனவும் இது போன்ற மையங்கள் தமிழகம் முழுவதும் ஏற்படுத்த திட்டம் இருப்பதாகவும் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.