அரசு உத்தரவு: 22 கொரோனா நோயாளிகளிடம் வசூலித்த 24.80லட்சத்தை திருப்பிக்கொடுத்த மருத்துவமனை
பெங்களூருவில் ராஜராஜேஸ்வரி நகரில் அமைந்துள்ள எஸ்.எஸ்.என்.எம்.சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 22 கொரோனா நோயாளிகளிடம் வசூல் செய்த ரூ.24.80 லட்சத்தை திருப்பிக் கொடுக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது
ஆர்.ஆர். நகர் மண்டலத்தில் மருத்துவமனைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகரிகளைக் கொண்ட சிறப்புக் குழு இந்த மருத்துவமனையின் பில்லிங் பதிவுகளை பார்வையிட்டபோது பணத்தைத் திரும்பத் தருமாறு கூறியுள்ளது.
22 நோயாளிகளில், 21 பேரிடம் மருத்துவசேவைகளுக்காக ரூ.55 ஆயிரம் முதல் ரூ.3.05 லட்சம் வரை முன்கூட்டியே செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. மற்றொரு நோயாளியிடம் இதுபோல் முன்கூட்டியே பணம் கட்ட வலியுறுத்தவில்லை என்றாலும் மாநில அரசு நியமித்த அளவைவிட அதிகமான கட்டணத்தை வசூலித்துள்ளது என ஐபிஎஸ் அதிகாரி ரூபா மோத்கில் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா பற்றிய அச்சம் மக்களிடையே அதிகமாக பரவியுள்ளதால் லேசான காய்ச்சல் அல்லது சிறிது அறிகுறிகள் தென்பட்டால்கூட மருத்துவமனைகளுக்கு விரைந்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 22 நோயாளிகளுக்கும் ஐசிஎம்ஆர் பதிவு குறியீடுகள் அல்லது மாதிரி பரிந்துரை படிவ எண்கள்(எஸ்ஆர்எம்) வழங்கப்பட்டிருந்தன. மேலும் பரிந்துரை படிவங்கள் வரும்வரை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர் என ரூபா தெரிவித்தார்.
எஸ்.எஸ்.என்.எம்.சி மருத்துவமனையை மேற்பார்வையிடும் ஸ்பார்ஷ் மருத்துவமனையின் மார்க்கெட்டிங் அதிகாரி குரு பிரசாத் கூறுகையில், SASTஇன் கீழ் சேர்க்கப்பட்ட 22 நோயாளிகள், சூட் அறைகள் மற்றும் விலையுயர்ந்த மருந்துகளை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதால் பிரச்னை எழுந்தது. இந்த ‘’கூடுதல் வசதிகள்’’ பற்றிய பிரச்னையை மருத்துவமனை தீர்த்துவைத்துள்ளது என்றார்.
நகரங்களில் இயங்கும் பல தனியார் மருத்துவமனைகள் இதுபோன்ற கூடுதல் வசதிகள் என்று கூறி அதிக கட்டணம் வசூலித்துவருவதாக பலமுறை புகார் அளித்துள்ளனர். பிபிஎம்பி கடிதம் உள்ளவர்கள்கூட முன்கூட்டியே பணம் செலுத்தினால் மட்டுமே தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். பின்னர் சிகிச்சைக்குத் தனியாக கட்டணம் வசூலிக்கிறார்கள் என அங்கிருந்த ஒரு ஆர்வலர் கூறியுள்ளார்.