”உலகம் அச்சப்படும் அளவுக்கு ஓமிக்ரான் ஆபத்தானதல்ல” - தென்னாப்பிரிக்க மருத்துவர் தகவல்

”உலகம் அச்சப்படும் அளவுக்கு ஓமிக்ரான் ஆபத்தானதல்ல” - தென்னாப்பிரிக்க மருத்துவர் தகவல்

”உலகம் அச்சப்படும் அளவுக்கு ஓமிக்ரான் ஆபத்தானதல்ல” - தென்னாப்பிரிக்க மருத்துவர் தகவல்
Published on

ஆங்கில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தென் ஆப்ரிக்க மருத்துவக் கழகத்தின் தலைமை மருத்துவர், “ஓமிக்ரான் திரிபு தொடர்பான உலகின் நடவடிக்கைகள் எதுவும், இங்குள்ள கள நிலவரத்தின் உண்மைத்தன்மையை பிரதிபலிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் சமீபத்தில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா திரிபு தொடர்பாக பல செய்திகள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக டெல்டாவை விட, ஓமிக்ரான் திரிபு ஆபத்தானது என்பது போன்ற கருத்துகளும் ஆய்வுகளும் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.

சமூக ஊடகங்கள் மட்டுமன்றி, அரசும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனத்துடனேயே இருக்கிறது. அந்தவகையில், இந்தியா உள்பட பல உலக நாடுகள் தென் ஆப்ரிக்காவுடனான தங்களின் பயணக்கட்டுப்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. பிரிட்டன் போன்ற சில நாடுகள், தென் ஆப்ரிக்காவுக்கு பயணிப்பதை சிவப்பு எச்சரிக்கை பட்டியலுக்கு கொண்டு வந்துவிட்டது. ஓமிக்ரான், உலகளவில் நான்காம் அலை கொரோனாவுக்கு கூட காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில், தென் ஆப்ரிக்காவின் மருத்துவ கழகத்தில் தலைமை மருத்துவர் ஏஞ்சலிக் கோட்ஸி என்ற மருத்துவர், "உலகம் இந்த ஓமிக்ரானை பார்ப்பது போல நிதர்சனம் இல்லை. இங்கு நிலைமை வேறாக உள்ளது. உலகின் பார்வை இதில் மாறவேண்டும், மாறுமென்று நம்புகிறோம்" என்றுகூறி, ஓமிக்ரான் விஷயத்தில் உலக நாடுகளின் எதிர்வினைகள் தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாக தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக ஆங்கில ஊடகமான எல்.பி.சி.-யில் பேசியுள்ள அவர், “இந்த திரிபு உறுதிசெய்யப்பட்ட நபர்கள், மிக மிக குறைந்த / லேசான அறிகுறிகளையே எதிர்கொண்டனர். கிட்டத்தட்ட இதற்கு முன்பு ஏற்பட்ட பீட்டா திரிபை போலவேதான், இந்த ஓமிக்ரான் திரிபும் உள்ளது. இந்த திரிபு ஏற்பட்டவர்களுக்கு, மருத்துவமனை அனுமதி கூட தேவைப்படவில்லை. வீட்டிலேயேகூட இவர்களுக்கு தீர்வு காண முடிகிறது. ஆகவே உலக மக்கள் அனைவரும் இந்தளவு அச்சம் தெரிவிக்கும் வகையில், இங்கு நிதர்சனம் இல்லை. அப்படி இருந்தால், எங்களுக்கு அது நிச்சயம் தெரிந்திருக்கும். ஏனெனில் நாங்கள்தான் இந்த பெருந்தொற்றில் களத்தில் இருக்கிறோம். நாங்களே சொல்கிறோம்... நிதர்சனம் வேறாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இந்த மருத்துவர்தான், முதன்முதலில் இந்த புதிய கொரோனா திரிபு குறித்து பதிவுசெய்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவரேவும் இக்கருத்தை கூறியுள்ளது, பேசுபொருளாக மாறிவருகிறது. மருத்துவர் ஏஞ்சலிக் இந்த கருத்துகளை முன்வைக்கும் அதேநேரத்தில், உலக சுகாதார நிறுவனம் ‘இந்த புதிய திரிபு எப்படி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது - என்னென்ன அறிகுறிகளை ஏற்படுத்துகிறது - என்ன மாதிரியான சிகிச்சை இதற்கு தேவைப்படுகிறது - தடுப்பூசிக்கு இந்த திரிபு எப்படி செயல்படுகிறது என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இப்போதே அனுமானத்துக்கு வரமுடியாது’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com