கொரோனாவை சமாளிக்க தமிழக அரசுக்கு  மேலும் 5000 கோடி தேவை: ரங்கராஜன் குழு அறிக்கை!

கொரோனாவை சமாளிக்க தமிழக அரசுக்கு  மேலும் 5000 கோடி தேவை: ரங்கராஜன் குழு அறிக்கை!
கொரோனாவை சமாளிக்க தமிழக அரசுக்கு  மேலும் 5000 கோடி தேவை: ரங்கராஜன் குழு அறிக்கை!

மருத்துவ உட்கட்டமைப்பை வலுப்படுத்த, மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க செங்கல்பட்டு அருகே தொழில் பூங்கா அமைக்கவும், சென்னை மற்றும் கோவை அருகே பயோடெக் தொழில்பேட்டைகள் அமைக்கவும், நகர்ப்புற 100 நாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்தவும் ரங்கராஜன் அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பெரும்தொற்றை சமாளிக்க தமிழக மருத்துவ வசதிகளுக்காக கூடுதலாக 5,000 கோடி ரூபாய் செலவிட வேண்டியிருக்கும் என தமிழக அரசு அமைத்த ரங்கராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூடுதலாக மருத்துவ துறைக்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் ரங்கராஜன் குழு தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்க மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா ஒன்று செங்கல்பட்டு அருகே நிறுவப்பட வேண்டும். அதேபோலவே துறைமுக வசதி உள்ள கடற்கரை பகுதியில் மருந்துகளை தயாரிப்பதற்கான தொழில் பேட்டை  ஒன்று நிறுவப்பட வேண்டும் . சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு அருகே பயோடெக் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் அந்த துறைக்கான சிறப்பு தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய தலைமுறைக்கு பிரத்தியேகமாக கிடைத்துள்ள அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளில் இது போன்ற தொழில் வளர்ச்சி திட்டங்களுக்கு ஊக்கம் அளிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை சீர்செய்யலாம் என்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சமாளிக்க ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் நகர்ப்புறங்களிலும் நூறு நாள் வேலைத்திட்டம் ஒன்றை தமிழக அரசு நடைமுறைப்படுத்தலாம் என அந்த குழு பரிந்துரை செய்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சமர்ப்பிக்கப்பட்ட  இந்த அறிக்கையில் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்க தமிழக அரசு கடன் திட்டங்கள் மற்றும் சலுகைகள் அளிக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. விவசாயத் துறை வளர்ச்சி கரோனா வைரஸ் பாதிப்புக்கு முந்தைய நிலையிலேயே தொடரும் என்றும் தொழில்துறையை போல விவசாய உற்பத்தியில் சரிவு இருக்காது என்றும் அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரான ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தகுழு கொரோனா வைரஸ் பாதிப்பை ஆய்வு செய்து அதிலிருந்து தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்யும்படி தமிழக அரசு இந்த குழுவை அமைத்து இருந்தது. இந்தியாவின் மிகவும் மூத்த பொருளாதார வல்லுனர்களின் ஒருவரும் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசகராக முன்பு பணிபுரிந்த  ரங்கராஜன் தமிழகத்தின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து வளர்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு பரிந்துரைகளை அளித்திருந்தார். குழுவின் அறிக்கையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்களுடைய நல்வாழ்வுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com