கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவியர் மருந்து - ராஜீவ்காந்தி மருத்துவமனை முடிவு ?

கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவியர் மருந்து - ராஜீவ்காந்தி மருத்துவமனை முடிவு ?
கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவியர் மருந்து - ராஜீவ்காந்தி மருத்துவமனை முடிவு ?
கொரோனாவுக்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்காவில் தயாராகும் ரெம்டெசிவியர் ‌மருந்தைப் பயன்படுத்த ராஜீவ்காந்தி மருத்துவமனை அனுமதியளித்துள்ளது.
 
அமெரிக்காவைச் சேர்ந்த கிலியட் சைன்சஸ் நிறுவனம் தயாரிக்கும் ரெம்டெசிவியர் என்ற மருந்து. கொரோனா பாதித்த சுமார் ஆயிரம் பேருக்கு ரெம்டெசிவியர் (Remdesivir) மருந்தைக் கொடுத்ததில், அவர்கள் 11 நாள்களில் குணமடைந்ததாக அமெரிக்காவின் தொற்றுநோய் நிறுவனத் தலைவர் அந்தோனி பவுச்சி அறிவித்தார். நோய் எதிர்ப்பு ஆற்றலை மட்டுமே கொண்டு ஒருவர் குணமடைவதற்குக் குறைந்தது 15 நாள்கள் ஆகும் நிலையில், ரெம்டெசிவியர் அவர்களை 5 முதல் 11 நாள்களில் கொரோனாவில் இருந்து குணமாக்கியதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
 
 
கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவத் தொடங்கிய நாளிலிருந்தே அதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதற்கு பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மலேரியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தபோது, உலகம் முழுவதும் அந்த மருந்து பிரபலமடைந்தது.மனிதர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏதும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இதயம் தொடர்பான பக்கவிளைவுகள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. எச்ஐவி கிருமிக்கு எதிரான இரு மருந்துகளின் கலவையைப் பயன்படுத்தி நடந்த பரிசோதனைகளும் தோல்வியடைந்தன.
 
 
ரெம்டெசிவியர் தயாரிக்கும் Gilead நிறுவனம், அமெரிக்காவுக்கு மட்டுமே இலவசமாக அளித்திருக்கிறது. இந்தியா, வங்கதேசம் சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும், உலகின் பிற நாடுகளுக்கும் சோதனைக்காக, குறைந்த அளவு மட்டுமே அனுப்பப் பட்டிருக்கின்றன.
 
இந்தியாவைப் பொறுத்தவரை டாக்டர் ரெட்டிஸ், சிப்லா உள்ளிட்ட பல்வேறு மருந்து நிறுவனங்களுடன் கிலியட் நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது. ரெம்டெசிவியர் மருந்து காப்புரிமைக்கு உள்பட்டது என்பதால், அதைத் தயாரிப்பதற்கு கிலியட் நிறுவனத்திடம் உரிமம் பெற்றாக வேண்டும். அதனால் மருந்தின் விலை மிக அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
வங்கதேசத்தைச் சேர்ந்த மிகப்பெரிய மருந்து தயாரிப்பாளரான பெக்சிம்கோ நிறுவனம் கிலியட் நிறுவனத்துடன் இணைந்து ரெம்டெசிவியர் மருந்தைத் தயாரிக்க இருக்கிறது. இந்த நிறுவனத்திலிருந்து வெளியாகி இருக்கும் தகவலின்படி ஒரு நேரத்தில் ஊசி போடுவதற்கான மருந்தின் விலை மட்டும் 5 ஆயிரத்து 400 ரூபாயாக இருக்கும் என்று தெரியவந்திருக்கிறது. ஒரு நோயாளிக்கு 5 முதல் 11 முறை ஊசி போடுவதற்கு சுமார் 55 ஆயிரம் வரை செலவாகக் கூடும். ஆயினும் கிலியட் நிறுவனம் இன்னும் மருந்துக்கான விலையை நிர்ணயிக்கவில்லை.
 
அதே நேரத்தில் உலகம் முழுவதும் பெருந்தொற்றுநோய் பாதிப்பு இருக்கும் நிலையில், காப்புரிமை மற்றும் கட்டாய உரிமம் பெறும் நடைமுறைகள் பன்னாட்டு உடன்பாடுகளின்படி தளர்த்தப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை ரெம்டெசிவியர் மருந்து சிறப்பானது என நிரூபிக்கப்பட்டு, உரிம நடைமுறைகளும் தளர்த்தப்பட்டால், உலகுக்கே கொரோனாவுக்கான மருந்து எளிதாகக் கிடைக்கக்கூடும்.
 
இந்நிலையில் Remdesiver என்ற மருந்தை சில மருந்து கலவைகளுடன் சேர்த்து  கொரோனா நோயாளிகளுக்கு வழங்கச் சென்னை ஓமந்தூரார்,  ராஜீவ்காந்தி மருத்துவமனைகளுக்கு அனுமதி அளித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com