பொள்ளாச்சி: அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கு கொரோனா; 3 நாட்கள் பள்ளி விடுமுறை
பொள்ளாச்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்துள்ள புளியம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி திறக்கப்பட்டு, நாள்தோறும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பின்னரே பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கபட்டனர்.
இந்நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் 47 மாணவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, இன்று வெளிவந்த அறிக்கையில் ஐந்து மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தொற்று ஏற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியரை வீட்டு தனிமையில் இருக்கும்படி சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த தகவலை அறிந்த கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மூன்று நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அறிவித்ததோடு பாதிப்பில்லாத மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வீட்டு தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.