கொரோனாவால் இறந்த முதியவரின் உடலை எரியூட்ட எதிர்ப்பு: நீண்ட நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரை எரியூட்ட எதிர்ப்பு கிளம்பிய நிலையில், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரின் பாதுகாப்புடன் எரியூட்டப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரயில்வே பீடர் சாலையில் வசித்தவர் மாணிக்கம், வயது 74. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஏற்கனவே இவருக்கு நெஞ்சுவலி காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்தார். இந்நிலையில் இவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் கொரோனா இருக்கும் என்ற அச்சத்தில் தனியார் மருத்துவமனையில் இருந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு இவரை பரிசோதித்த போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடலை சொந்த ஊரான அறந்தாங்கி கொண்டுவந்து மின்மயானத்தில் எரியூட்ட உறவினர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள எரியூட்டும் மயானத்திற்கு உடல் கொண்டுவந்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், உடலை எரியூட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இதையறிந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இறந்தவரின உடலை மின்மயானத்தின் வெளியே வைத்து பாதுகாப்பு உடைகளுடன் அவரது மகன் மற்றும் உறவினர்கள் மரியாதை செலுத்திய பிறகு நகராட்சி ஊழியர்களால் எரியூட்டப்பட்டது.