காஞ்சிபுரத்தில் வேகமாக நிரம்பும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 612 படுக்கைகளில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள 235 படுக்கைகள் உட்பட, மொத்தத்தில் 562 படுக்கைகள் நிரம்பிவிட்டன. விரைவில் படுக்கை இல்லாத சூழல் ஏற்படும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
புதிதாகக் கட்டப்பட்டு வரும் தாய்-சேய் நல சிகிச்சை மையத்தில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 347 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இந்தக் கட்டடம் ஓரிரு நாட்களில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இங்கு 6 கிலோ லிட்டர் ஆக்சிஜன் பயன்பாட்டில் உள்ளது. கூடுதலாக 10 கிலோ லிட்டர் ஆக்சிஜன் வசதிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்தால், நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்கும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.