இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 49 ஆக உயர்வு - டெல்லியில் மேலும் 4 பேருக்கு தொற்று
தலைநகர் டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து நாடெங்கும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்று அதிகவேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் அத்தொற்று அதிகரித்து வருகிறது. டெல்லியில் இன்று மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ள நிலையில் அங்கு அத்தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 6 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என குறிப்பிட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், இவர்களில் ஒருவர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக தெரிவித்தார்.
ராஜஸ்தானிலும் இன்று மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. இதையடுத்து நாடெங்கும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 20 பேருக்கும் ராஜஸ்தானில் 13 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கிடையே தென்னாப்பிரிக்க நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இல்லை என பெங்களூருவில் போலியாக சான்றிதழ் கொடுத்த 4 நபர்கள் கைதாகியுள்ளனர். இவர்கள் கொடுத்த போலி சான்றிதழை பயன்படுத்தி தொற்றால் பாதிக்கப்பட்டவர் துபாய் வழியாக தென்னாப்ரிக்காவுக்கு சென்று விட்டார். ஆனால் அவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளை மரபணு சோதனைக்கு உள்ளாக்கியதில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இவர்தான் இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நபர் ஆவார்.