“பூஸ்டர் டோஸ் பெற மருத்துவர் சான்றிதழ் தேவையில்லை”- மத்திய அரசு
பூஸ்டர் டோஸ் பெறுவதற்கு இணை நோய் சான்றிதழ் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநில சுகாதார அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இதனை இன்று தெரிவித்தார்.
வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், முன் களப்பணியாளர்கள் சுகாதார ஊழியர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து அனைத்து மாநில சுகாதார அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “இணை நோய்கள் உள்ளவர்கள் அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற தவறான தகவல் பரவி வருகிறது. மத்திய அரசு அப்படி அறிவிக்கவில்லை. இணை நோயாளிகள் தங்கள் மருத்துவரிடம் சுயமாக ஆலோசனை பெற்றுக் கொள்ள மட்டுமே அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஏற்கெனவே செலுத்திய ஊசியை போட வேண்டுமா அல்லது வேறு ஊசி போட வேண்டுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் பட்டியலை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1.64 கோடி பேர்; முன் களப்பணியாளர்கள் 9.78 லட்சம் பேர், சுகாதார பணியாளர்கள் 5.65 லட்சம் பேர் உள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் 33.2 லட்சம் பேர் 15 முதல் 17 வயதில் உள்ளனவர்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் 15 வயது 17 வயதிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அவர்கள் கோவின் செயலியில் முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜனவரி 1ம் தேதி முதல் பதிவு செய்ய தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும்?