கொரோனா நோயாளிகள் அனைவரும் காசநோய்க்கான பரிசோதனையை செய்யவும்: மத்திய அரசு பரிந்துரை

கொரோனா நோயாளிகள் அனைவரும் காசநோய்க்கான பரிசோதனையை செய்யவும்: மத்திய அரசு பரிந்துரை
கொரோனா நோயாளிகள் அனைவரும் காசநோய்க்கான பரிசோதனையை செய்யவும்: மத்திய அரசு பரிந்துரை

கொரோனா நோயாளிகள் அனைவரும் டி.பி எனப்படும் காசநோய்க்கான பரிசோதனையை செய்து கொள்ளவேண்டுமென்றும், காசநோயாளிகள் அனைவரும் கொரோனாவுக்கான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டுமென்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்த கண்காணிப்பு முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ளும்படி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு காசநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஊடகங்கள் சிலவற்றில் தரவுகளுடன் செய்தி வெளியாகியிருந்தது. ஒவ்வொரு நாளும் பலர் காசநோய்க்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவது மருத்துவர்களை கவலையடைச் செய்வதாக அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தப் பரிந்துரையை அளித்துள்ளது.

இதுதவிர, TB-COVID மற்றும் TB-ILI/SARI என்ற இரண்டு பரிசோதனைகளையும் மேற்கொள்ளும்படி அறிவறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இதை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அமல்படுத்தியுள்ளன.

கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளால், கடந்த 2020-ம் ஆண்டில் டி.பி நோய் பாதிப்பு 25 சதவீதம் குறைந்துள்ளது என்றும், இந்த பாதிப்பை குறைப்பதற்கான சீறிய முயற்சிகளை அனைத்து மாநிலங்களும் எடுக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அதேநேரம்  கொரோனா பாதிப்பு காரணமாக, காசநோய் பாதிப்பு அதிகரிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

டி.பி மற்றும் கொரோனா ஆகிய இரண்டுமே, தொற்று நோய் மற்றும் நுரையீரல்களை தாக்கக்கூடியது என்பதாலும், இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் என இவற்றின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதாலும் இந்த இரு நோய்களும் தொடர்புப்படுத்தப்படுகின்றன. மேலும், டி.பி கிருமி மனித உடலில் செயலற்ற நிலையில் இருந்து, எதிர்ப்பு சக்தி குறையும்போது பல்கி பெருகும் ஆற்றல் உடையது. கோவிட் பாதிப்புக்கு பிந்தைய சூழலிலும், இதே நிலைதான் உள்ளது.

வைரஸ் அல்லது ஸ்டிராய்டு சிகிச்சையின் காரணமாக தனிநபருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். அதுபோன்ற நேரத்தில் கருப்பு பூஞ்சை போல காசநோயும் சந்தர்ப்ப பாதிப்பாக ஏற்படுக்கூடும் என்பதால், கொரோனா பாதிப்பு ஒரு தனிநபரை தீவிர டி.பி பாதிப்புக்கு ஆளாக்கும் வாய்ப்புள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை முன்னிறுத்தியே, நோய்ப்பாதிப்பை வருமுன் தடுக்க தற்போதே காசநோய்க்கான ஸ்கீரினிங்கை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com