கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: 5 நபர்களுக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு தடை
கொரோனா பரவல் அதிகரிப்பதால் கேரளாவில் 5 நபர்களுக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதையடுத்து இன்று முதல் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்க ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு அக்டோபர் 2 ஆவது வாரத்தில் 15 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக கேரள சுகாதரத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு துரிதப்படுத்தியுள்ளது. இதுகுறித்த ஆலோசனையில் பொதுமுடக்கம் வேண்டாம் என்று அனைத்துக்கட்சிகளும் முடிவெடுத்த நிலையில் கொரோனா விதிகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தங்கக்கடத்தல், லைப்மிஷன் திட்ட முறைகேடுகளை கண்டித்து நடந்த போராட்டங்கள் நிறுத்தப்பட்டன.
தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப 144 தடை உத்தரவு பிறப்பிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்க எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் தலைநகர் திருவனந்தபுரத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.