"எனக்கு கொரோனா இல்ல" வாக்குவாதம் செய்து மருத்துவமனையில் இருந்து தப்பிய நபர் !
கர்நாடக மாநிலம் மங்களூரில் கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்தவர் மருத்துவமனையில் இருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
மங்களூர் விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை துபாயில் இருந்து ஒருவர் வந்துள்ளார். அந்த நபருக்கு கடுமையான ஜூரமும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறியும் இருந்துள்ளது. இதனையடுத்து அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கான தனி வார்டில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அந்த நபர் மருத்துவமனை ஊழியர்களிடமும் மருத்துவர்களிடமும் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லையென வாதிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து தான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும் கூறிக்கொண்டு இருந்திருக்கிறார். ஆனால், அவர் எப்படியோ இரவு நேரத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பியுள்ளார்.
இதனையடுத்து உஷாரான மருத்துவமனையின் அதிகாரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். இப்போது மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த தட்சிண கன்னடா மாவட்டத்தின் சுகாதாரத்துறை அதிகாரி சிகந்தர் பாட்சா, "பாதிப்பு இருப்பதாக கருதப்படும் நபர்கள் 24 மணி நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள் பின்பு பரிசோதனைகள் முடிக்கப்பட்டு அவர்களை டிஸ்சார்ச் செய்கிறோம். இது வழக்கமான நடைமுறைதான். தப்பியோடியவரை கண்டுப்பிடிக்க காவல்துறையின் உதவியை நாடியுள்ளோம்" என்றார்.