கேரளாவில் மீண்டும் 30 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா தொற்று
கேரளாவில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளநிலையில் தினசரி கொரோனா தொற்று மீண்டும் 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
அங்கு தொற்று செவ்வாய்க்கிழமை 25 ஆயிரத்து 700ஐ கடந்திருந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் அதிகரித்து 30 ஆயிரத்து 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கேரளாவில், கொரோனா பரவல் காரணமாக இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கிலும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள், பள்ளிகள் திறப்பதற்காக, முன்னேற்பாடுகளை செய்ய முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று இன்னும் குறையாத நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது, பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.