கொரோனாவால் உயிரிழந்த கர்நாடக முதியவரின் மகளுக்கும் கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த கர்நாடகாவை சேர்ந்த முதியவரின் மகளுக்கும் நோய் தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.
கல்புர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தார். இவர்தான் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் நபர். இவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், முதியவரின் மகளுக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மூன்று பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்த முதியவரின் மகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 14 மாநிலங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகப்பட்சமாக 32 பேரும், கேரளாவில் 22 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 13 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹரியானாவில் 14 பேரும் டெல்லியில் 7 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 6 பேருக்கும், ராஜஸ்தானில் நால்வருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லடாக் மற்றும் தெலங்கானாவில் தலா 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரகண்ட்டில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.