சென்னை: கொரோனாவுக்கு பலியான காவல்துறை ஆய்வாளர் !

சென்னை: கொரோனாவுக்கு பலியான காவல்துறை ஆய்வாளர் !

சென்னை: கொரோனாவுக்கு பலியான காவல்துறை ஆய்வாளர் !
Published on

(கோப்பு புகைப்படம்)

சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்குப் பிரிவு ஆய்வாளர் பாலமுரளி, கொரோனா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது கொரோனாவால் தமிழகத்தில் காவல்துறையில் நிகழ்ந்த முதல் உயிர் பலியாகும்.

கடந்த 5-ஆம் தேதி காய்ச்சல் காரணமாக ஆய்வாளர் பாலமுரளிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று உறுதியானதால் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மகாநதி விடுதியில் அனுமதிக்கப்பட்டார். பிறகு தொடர்ந்து காய்ச்சல் இருந்து உடல் நிலை பாதிக்கப்பட்டதால் உடனே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாலமுரளி அனுமதிக்கப்பட்டார். ஆனால் கடந்த 13 ஆம்தேதி உடல் நிலை மோசமானது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனது சொந்த செலவில் ரூ. 2.25 லட்சத்துக்கு மருந்தை வாங்கிக் கொடுத்தார். உரிய சிகிச்சை கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

அதன் பிறகு பாலமுரளியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரது உடல் நிலையை தனியாக மருத்துவ குழு ஒன்று கண்காணித்து வந்தது. ஆனால் இன்று அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து பாலமுரளி இன்று மாலை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். வடபழனி காவலர் குடியிருப்பில் வசித்து வந்த அவருக்கு மனைவி, 8-வது படிக்கும் மகள், 4-வது படிக்கும் மகன் உள்ளனர். சொந்த ஊர் வேலூர். இறந்து போன பாலமுரளியின் தந்தையும் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்.

பாலமுரளி 2000 ஆம் ஆண்டு காவல்துறையில் நேரடி உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தவர். சென்னையில் நீலாங்கரை, கேகே நகர், மாம்பலம் காவல் நிலையங்கள் உள்பட பல காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளராக பணியாற்றியவர். சட்டம்-ஒழுங்கு பணியை சிறப்பாக செய்வதில் திறமை வாய்ந்தவர் என்றும் மனிநேயத்துடன் செயலாற்றுபவர் என்றும் அவருடன் பணியாற்றும் காவலர்கள் கண்ணீருடன் கூறியுள்ளனர்.

சென்னை காவல்துறையில் இதுவரை கொரோனாவால் 731 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். 278 பேர் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com