15-18 வயதுக்குட்பட்ட சிறார்கள் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு செய்து கொள்வது எப்படி?
வரும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் இந்திய அரசு 15 - 18 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ளது. இப்போதைக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் சிறார்கள் அதற்கான முன்பதிவு செய்து கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2022, ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த முன்பதிவு ஆரம்பமாகிறது. இத்தகைய சூழலில் முன்பதிவு செய்து கொள்வது எப்படி என்பதை அரசு விவரித்துள்ளது.
CoWIN தளத்தின் தலைமை நிர்வாகி மருத்துவர் ஆர்.எஸ்.ஷர்மா அதனை விவரிக்கிறார். “மாணவர்களிடம் ஆதார் அல்லது இதர அடையாள அட்டைகள் ஏதேனும் இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் சிறார்கள் பத்தாம் வகுப்பு அடையாள அட்டையை கொண்டும் CoWIN தளத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து கொள்வதன் மூலம் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நாள், நேரம் மற்றும் இடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட தகவலின்படி CoWIN தளத்தில் பெரியவர்கள் எப்படி முன்பதிவு செய்தார்களோ அதே போன்ற நடைமுறைதான் சிறார்களுக்கும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மாணவர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்துகின்ற மையங்களுக்கு நேரடியாக சென்று, தங்களது அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் சொல்லப்படுகிறது.
பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள விரும்பும் 60 வயதை கடந்த மூத்தவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதிலிருந்து 9 மாதங்கள் (39 வாரங்கள்) கடந்திருந்தால் CoWIN தளத்தில் அதற்கான முன்பதிவை செய்து கொள்ளலாம் என ஆர்.எஸ்.ஷர்மா தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசிக்கு எந்த டோஸ்?
முதல் 2 தவணை தடுப்பூசிகள் கோவாக்சின் எனில் அதையே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்த வேண்டும். கோவிஷீல்டு எனில் அதையே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.