'கோவாக்ஸின்' தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

'கோவாக்ஸின்' தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!
'கோவாக்ஸின்' தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

தன்னார்வலராக முன்வந்து பரிசோதனைக்காக கோவிக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா சுகாதாரத் துறை அமைச்சருக்கு இப்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் சுகாதாரத்துறை மற்றும் உள்துறை அமைச்சர் அனில் விஜ். 67 வயதான இவர் சமீபத்தில், இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைகளில் பங்கெடுத்து, பரிசோதனைக்காக தடுப்பு மருந்தை தன் உடலில் செலுத்திக்கொண்டார்.

இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் அனில், "மாநிலத்திலேயே தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற ஹரியானாவின் முதல் தன்னார்வலர் நான்தான்" என்றார். நவம்பர் 20-ம் தேதி அவருக்கு தடுப்பு மருந்து உடலில் செலுத்தப்பட்ட நிலையில், இன்று அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ள அமைச்சர் அனில், "எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது அம்பாலா கண்டோன்மென்ட் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இதனால் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர், சபாநாயகர் கியான், மேலும் இரண்டு எம்எல்ஏக்களுக்கும் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், இப்போது அனிலுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவாக்ஸின் தடுப்பு மருந்து!

அனில் எடுத்துக்கொண்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த இந்தத் தடுப்பு மருந்து தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த கோவாக்ஸின் தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வெற்றி கண்ட நிலையில் மூன்றாம் கட்ட பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஐ.சி.எம்.ஆர் உடன் இணைந்து மூன்றாம் கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வரும் பாரத் பயோடெக், தடுப்பு மருந்தை 26,000 பேருக்கு செலுத்த திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில்தான் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட அமைச்சர் அனிலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால், இந்த நிறுவனம் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், பிரதமர் மோடி ஹைதராபாத் சென்று, கொரோனா தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்தியை பார்வையிட்டார். அவர் பார்வையிட்டது இந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பு மருந்து உற்பத்திதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com