கேரளாவில் 40 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: பின்புலம் என்ன?
ஓணம் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட தளர்வுகளால், கேரளாவில் கடந்த வாரம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வேகத்திலேயே இருந்துவந்தது. இதன் விளைவாக, தற்போது கேரளாவில் கொரோனா உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,51,670 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் நேற்று (ஆகஸ்ட் 29) மேலும் 29,836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தபாதிப்பு எண்ணிக்கை 40,07,408 என்று உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 75 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை கேரளாவில் 20,541 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 2,12,566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருநாளில் கேரளாவில் 22,088 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 37,73,754 பேர் குணமடைந்துள்ளனர்.
கேரளாவின் நேற்றுக்கு முந்தைய நாள் கொரோனா தினசரி பாதிப்பை ஒப்பிடும்போது, நேற்று 24 மணி நேரத்தில் பாதிப்பு சற்று குறைந்திருக்கிறது. ஆம், ஆக.28-ல் 1,67,497 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 31,265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்தவகையில் கிட்டத்தட்ட 2,000 குறைவாக நேற்று தொற்றாளர்கள் எண்ணிக்கை பதிவானது. இந்த இடத்தில், முந்தைய நாளைவிடவும் நேற்று கொரோனா பரிசோதனையில் 15,827 பரிசோதனைகள் குறைந்துள்ளதும் கவனிக்கத்தக்கது. அதனாலும்கூட தொற்று எண்ணிக்கை நேற்றைய தினம் குறைந்திருக்கலாம் என சொல்லப்படுவதால், இதை ஆரோக்கியமான விஷயமாக பார்க்கமுடியவில்லை.
இறப்பை பொறுத்தவரை, ஆக.28-ல், 153 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆக.29-ல் 75 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனடிப்படையில் பார்த்தால், இறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளன. இது மட்டுமே இப்போதைக்கு கேரளாவில் ஆறுதலளிக்கும் விஷயமாக உள்ளது.
ஆகஸ்ட் 23 - 29, ஒரு வாரத்துக்குட்பட்ட காலத்தில் இந்திய அளவில் மொத்தம் 2.3 லட்சம் பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது. ஜூன் மாதத்துக்குப்பிறகு, ஒரே வாரத்தில் இவ்வளவு அதிகப்படியான நபர்களுக்கு கொரோனா உறுதியாவது இதுவே முதன்முறை. ஜூன் மாத இறுதியில், அதிகப்படியாக 3.05 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகிருந்தது. பாதிப்பு அதிகமாக பதிவானதை போல, இறப்பும் கடந்த வாரத்தில் இந்திய அளவில் 10.5% அதிகமாக பதிவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த வாரத்தில் இந்திய அளவில் பதிவான மூன்றில் இரு பங்கு கொரோனா நோயாளிகள், கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 66% பேர் (ஏறத்தாழ 1.9 லட்சம் பேர்) கேரளாவை சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இந்தளவுக்கு பாதிப்பு உச்சத்திலிருக்கும் நேரத்திலும்கூட, அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் கொரோனா அதிகரிப்பு ஏதுமில்லை.
இந்தளவுக்கு கேரளாவில் பாதிப்பு அதிகரிக்க, ஓணம் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட தளர்வுகள் மற்றும் இதர விழாக்கால கொண்டாட்டங்களே காரணமென சொல்லப்படுகிறது.