விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல - வல்லுநர் குழு
நடிகர் விவேக்கின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 15-ஆம் தேதி கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் ஏப்ரல் 17-ஆம் தேதி நடிகர் விவேக் உயிரிழந்தார். விவேக் மரணம் ஏற்பட்டபோது தடுப்பூசியால் தான் அவர் இறந்தார் என்கிற ரீதியில் தகவல் பரவியது. அதனால் தடுப்பூசி செலுத்துவதில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. எனவே விவேக் இறந்தது குறித்து, தடுப்பூசியால் ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய அரசின் வல்லுநர் குழு ஆய்வுசெய்தது. அதில், உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என வல்லுநர் குழு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
ஏற்கெனவே, விவேக் மரணம் தடுப்பூசியால் நடைபெறவில்லை என மாநில சுகாதாரத்துறை விளக்கம் கொடுத்தது. தற்போது மத்திய குழு கூறியிருப்பதன் மூலம் தடுப்பூசியால் விவேக் மரணம் ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.