“வெளியே செல்லாதீர்கள்”-கொரோனாவுக்கு உயிரிழந்த முன்னாள் காங்., எம்.பி.யின் வார்த்தைகள்..!
உத்தரபிரதேச காஸியாபாத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேந்திர பிரகாஷ் கோயல் கொரோனா பாதித்து நேற்று மரணமடைந்தார். உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு முன்பு பார்க்கும் மக்கள் அனைவரிடமும் “வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம், கொரோனா உள்ளது” என்று சொல்லிக்கொண்டே இருந்தவர் அவர்.
74 வயதான சுரேந்திர பிரகாஷ் கோயல், நேற்று டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் கோவிட் 19 தொற்று காரணமாக காலமானார். ஜூலை 26 அன்று சுரேந்திர பிரகாஷ் கோயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அப்போதிலிருந்தே அவருக்கு மூச்சு பிரச்சினைகள் இருந்ததால் அவர் வென்டிலேட்டரில் இருந்தார். வயதுமூப்பு மற்றும் பிற காரணிகளால் பல உடலுறுப்புகள் செயலிழந்த காரணத்தால் அவர் காலமானார் என்று கங்கா ராம் மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உள்ளூர் வார்டு உறுப்பினராக அரசியல் வாழ்வை தொடங்கிய கோயல் 2004 இல் காஸியாபாத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு முந்தைய நாட்களில், அனைவரிடமும் “ வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம், கொரோனா உள்ளது” என்று சொல்வார். இதுதான் மக்களுக்கு அவர் சொல்லும் செய்தியாக உள்ளது ”என்று அவரது மகன் சுஷாந்த் கோயல் கூறினார்.