`அரசு உத்தரவுப்படி கொரோனா கால வழக்குகளை ரத்து செய்க’- அதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை

`அரசு உத்தரவுப்படி கொரோனா கால வழக்குகளை ரத்து செய்க’- அதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை
`அரசு உத்தரவுப்படி கொரோனா கால வழக்குகளை ரத்து செய்க’- அதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை

கொரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசின் உத்தரவின்படி ரத்து செய்யும்படி டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை உயர்அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு கொரோனா சமயத்தில் ஊரடங்கு உத்தரவு மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு கடும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடையை மீறி வெளியே வந்தவர்கள் மீது கொரோனா தொற்று பரப்பியதாக காவல்துறை சார்பில் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது அபராதமும் வசூல் செய்யப்பட்டது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து முழு தளர்வு அறிவிக்கப்பட்டு வழக்கம் போல அனைத்து தடைகளும் விலக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா சமயத்தில் பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து கொரோனா வழக்குகளையும் ரத்து செய்ய தமிழக அரசு தற்போது முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 19.2.2021 அன்று நடந்த சட்டசபையின் போது கொரோனா வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்தார். அவரது அந்த அறிவிப்பில், ‘‘கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பியவர்கள் ஆகியோர் மீது சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளுள் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவற்றை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் பொதுமக்களின் நலன் கருதி கைவிடப்படுகிறது’’ என தெரிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பை செயல்படுத்தி தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரன் கொரோனா வழக்குகளை ரத்து செய்யும்படி காவல்துறைக்கு தற்போது உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவுப்படி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவுப்படி கொரோனா சமயத்தில் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக 2019 – 2020ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

ரத்து செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள் தொடர்பாக வருகிற 17ம் தேதிக்குள் டிஜிபி அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பப்படவேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தனது உத்தரவில் கூறியுள்ளார். உத்தரவின் நகல்கள் அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com