செப்டம்பர் - அக்டோபரில் கொரோனா 3 வது அலை உச்சத்தை அடையும்: ஐஐடி கான்பூர் ஆய்வு

செப்டம்பர் - அக்டோபரில் கொரோனா 3 வது அலை உச்சத்தை அடையும்: ஐஐடி கான்பூர் ஆய்வு
செப்டம்பர் - அக்டோபரில் கொரோனா 3 வது அலை உச்சத்தை அடையும்: ஐஐடி கான்பூர் ஆய்வு

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம், ஓரளவு குறைந்திருக்கும் இந்த நேரத்தில் மூன்றாவது அலை பாதிப்பு எப்போது தொடங்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. நிபுணர்கள் பலரும் இதுதொடர்பாக கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், கான்பூர் ஐ.ஐ.டி.யை சேர்ந்த பேராசிரியர் ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேந்திர வர்மா, குழுவொன்றை அமைத்து கொரோனா மூன்றாவது அலை பற்றி ஆய்வொன்றை முன்னெடுத்துள்ளனர். அதன் முடிவில், கொரோனா மூன்றாவது அலை, இவ்வருடம் செப்டம்பர் – அக்டோபரில் உச்சத்தை தொடுமென கணிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அவர்கள் பத்திரிகையாளர் மத்தியில் தெரிவிக்கையில், “மூன்றாவது அலை ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் குறித்த பயம், பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் அதிகமாக இருக்கிறது. அந்த பயத்தை போக்க எண்ணி, நாங்கள் ஆய்வொன்று தொடங்கினோம். அதற்காக எஸ்.ஐ.ஆர். என்ற மாடலின் மூலம், இரண்டாம் அலையின் முடிவு குறித்த சில முன்முடிவுகளை கணித்து, மூன்றாவது அலை எப்போது ஏற்படுமென ஆராய்ந்தோம்.

அப்படி, இரண்டாம் அலை எப்போது முடிவுக்கு வருமென்பது குறித்து நாங்கள் எடுத்த முடிவுகளில் முக்கியமானது, ‘ஜூலை 15 ம் தேதி, இந்தியா முழுக்க பொதுமுடக்க தளர்வுகள் முடிவுக்கு வந்துவிடும்’ என்பது. அப்படி நடந்தால் பொதுமக்கள் அனைவரும் ஒரேநேரத்தில், இயல்புக்கு திரும்புவார்கள். அப்படி ஜூலையின் பிற்பகுதியில், இந்தியா இயல்புக்கு திரும்பும்போது, அதன் விளைவாக

  • அக்டோபரில், மூன்றாவது அலை கொரோனா இந்தியாவில் உச்சத்தை அடையும். இருந்தாலும், இரண்டாவது அலை அளவுக்கு அது அதிகமாக இருக்காது.
  • அக்டோபருக்கு முன்னராக (செப்டம்பரில்), இரண்டாவது அலையை மிஞ்சும் அளவுக்கான மூன்றாவது அலை பாதிப்பு, மிக அதிகமாக ஏற்படலாம்.
  • அதிக பாதிப்பு காரணமாக, மீண்டுமொரு முறை நாடு முழுவதும் மிக கடுமையாக ஊரடங்கு விதிகள், தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும். அதன் விளைவாக, அக்டோபரின் பிற்பகுதியில் மூன்றாவது அலையின் தாக்கம் குறையும். இருந்தாலும், இது இரண்டாவது அலை அளவுக்கு தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தாது”

என்று கூறியுள்ளனர். இந்த ஆய்வில், இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குறித்தும், தடுப்பூசி போட்டவர்களால் மூன்றாவது அலை கொரோனாவில் ஏற்படுத்தவிருக்கும் எண்ணிக்கை குறைவு குறித்தும் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அவை சேர்க்கப்பட்டு மேற்கொள்ளப்படும் ஆய்வு முடிவை, இவ்வார இறுதியில் எதிர்ப்பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இக்குழுவினர் தான், தினமும் covid19-forecast.org. தளத்தில், மாநில அளவிலான கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றனர். அதனடிப்படையில், சில முக்கிய தரவுகளை அவர்கள் முன்வைக்கின்றனர். அவை,

  • ‘இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து இந்தியாவில் பல மாநிலங்கள் 5 சதவிகிதத்துக்கும் குறைவாக ­பதிவானாலும்கூட கேரளா, கோவா, சிக்கிம், மேகலாயா போன்ற மாநிலங்கள் தற்போதும் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகவே கொரோனா நோயாளிகளை பதிவு செய்து வருகிறது
  • இந்தியாவின் தினசரி ஒருநாள் பாதிப்பு குறைந்து வருகிறது. ஜூன் 19 கணக்குப்படி, அது 63,000 என்றுள்ளது. இரண்டாவது அலை தொடக்கத்தில் அது 4 லட்சம் என இருந்தது.
  • இந்தியாவில் தினசரி பதிவாகும் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. சமீபத்தில்கூட இது 3.5 சதவிகிதமாக அதிகரித்தது’

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com